Thursday, September 3, 2009

காலணிக்குள் உறங்கும் கடல் மணல்


ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்ற பத்தொன்பது வயது இளைஞனான மலிக், பிரான்சின் மத்திய சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றப்படுகிறான். மலிக் ஒர் அனாதை. பதினொரு வயது வரை பள்ளி சென்றவன் என்பதால் நன்கு எழுதவோ, படிக்கவோ அறியாதவன். அவன் மதம் இஸ்லாம் எனினும் அதன் நெறிகளை அவன் பின்பற்றுபவனாக இல்லை.

முதன் முதலாக புதியதோர் சிறைக்குள் நுழையும் ஒர் கைதிக்கு ஏற்படும் பய உணர்வும், அடுத்து என்ன என்ற கேள்வியும் துணையாகவிருக்க, மத்திய சிறைக்கு வந்து சேர்கிறான் மலிக். ஒர் சாதரண கைதிக்குரிய அறை அவனிற்கு வழங்கப்படுகிறது. அவ்வறையின் ஜன்னலினூடு வரும் ஒளி, சில சமயங்களில் அவன் முகத்தையும் ஒர் சிறை அறையாக மாற்றிவிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

சிறை வாழ்க்கையில் ஐக்கியமாகவிருக்கும் மலிக், சிறையில் என்ன செய்ய விரும்புகிறான் என்பதை விசாரிக்கும் சிறை அதிகாரி, மலிக் இஷ்டப்பட்டால் அவன் தன் கல்வியை தொடரலாம் எனவும், சிறையின் தொழிற்சாலையில் வேலைக்கு சேர முடியும் என்பதையும் அவனிற்கு விளக்குகிறார்.

அவர் ஆலோசனையைப் பின்பற்றும் மலிக் சிறைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்கிறான். சிறையில் அமைந்திருக்கும் துணிகளை தைத்துக் கொடுக்கும் தொழிற்சாலையிலும் வேலைக்கு சேர்ந்து கொள்கிறான்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை, காவலுடன் கூடிய திறந்த வெளிப்பகுதியில் இளைப்பாற அனுமதிப்பது வழக்கம். இப்பகுதியில் கைதிகள் ஓய்வாக இருக்கவோ, உடற்பயிற்சியில் ஈடுபடவோ, தங்களிற்குள் உரையாடிக் கொள்ளவோ, போதைப் பொருட்களை வாங்கிக் கொள்ளவோ முடியும்.

சிறை என்பது வன்முறை நிரம்பியது. கைதிகளை விட வன்முறை சிறைக்கு நெருக்கமானது. இந்த வன்முறை மிகவும் தந்திரமானது. சிறையின் சட்டங்களிலிருந்து தப்புவதற்கு பழக்கப்பட்டது. இத்திறந்த வெளிக்கு முதன் முதலாக வரும் மலிக், அவன் காலில் அணிந்திருக்கும் புதிய காலணிகளை கவர்ந்து கொள்ள விரும்பும் இரு கைதிகளால் தாக்கப்படுகிறான். அவனை காப்பாற்ற யாரும் இல்லை. காவலர்கள் கூட இதனைக் கவனிக்காதது போல் இருக்கிறார்கள். சிறையில் ஒன்று வலியவனாக இருக்க வேண்டும் அல்லது வலியவன் ஒருவனது பாதுகாப்பின் கீழே இருக்க வேண்டுமென்பது மலிக்கிற்கு புரிய ஆரம்பிக்கிறது.

5-photos-festival-de-cannes-beautes-cachees-de-cannes-Tahar-Rahim-Niels-Un-prophete_articlephoto இந்த திறந்த வெளிப்பகுதியே ஒர் சிறையில் வாழும் கைதிகளின் அரசன் யார் என்பதை எடுத்துக்காட்டும் பகுதியாகவும் உள்ளது. செஸார் எனப்படும் கோர்ஸிக்கா [பிரான்ஸின் தென்கிழக்கில் உள்ள ஒர் தீவு] தீவைச் சேர்ந்த மாஃபியா தலைவன் ஒருவனின் தலைமையின் கீழ் இருக்கும் கோர்ஸியக் கைதிகள் அச்சிறையில் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள்.

சிறையின் உயர் அதிகாரிகளையும், காவலர்களையும், சிறைக்கு வெளியே உள்ள சில அதிகாரங்களையும் ஊழல் மூலம் தன் கைக்குள் போட்டுக் கொண்டு, சிறைக்குள் ஒர் ராஜாங்கத்தை நடாத்தி வருகிறான் செஸார். அவன் சொன்னதுதான் அங்கு சட்டம். கைதிகள் இளைப்பாறச் செல்லும் திறந்த வெளியில் இருக்கும் ஒர் வாங்கில் செஸாரையும், அவன் சகாக்களையும் தவிர வேறு யாரும் அமர்ந்து விட முடியாது. செஸார் மன்னரின் அரியணை அது.

இதேவேளையில் செஸாரின் கூட்டத்திற்கு எதிரான ஒர் வழக்கில் அவர்களிற்கு எதிராக சாட்சி சொல்வதற்காக அயூப் எனும் கைதியை சிறையின் மற்றொரு பிரிவில் தற்காலிகமாக தங்க வைக்கிறார்கள் சிறை அதிகாரிகள். இத்தகவலுடன் கூடவே அயூப் அச்சிறையை விட்டு உயிருடன் வெளியே வரக்கூடாது எனும் தகவலும் செஸாரை வந்தடைகிறது.

அயூப், சிறையில் அரபு இனக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதியில் உள்ள ஒர் பிரத்தியேக அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறான். அயூப்பின் கதையை எவ்வாறு முடிக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறான் செஸார். தன் சகாக்களை இவ்விவகாரத்தில் சம்பந்தப்படுத்த அவன் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்.

19138477_w434_h_q80 அரபுக் கைதிகள் இருக்கும் பிரிவின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் மலிக்கிடம் ரகசியமாக உரையாடும் அயூப், மலிக் தன் இச்சைகள் சிலவற்றை தீர்த்து வைத்தால் மலிக் புகைப்பதற்கு போதைப்பொருள் தருவதாகக் கூறுகிறான். இதனால் கோபம் கொள்ளும் மலிக், அயூப்பை திட்டி விட்டு சென்று விடுகிறான்.

சிறையில் எப்போதும் திறந்திருக்கும் காதுகள் வழியாக, அயூப் குளியலறையில் மலிக்கை நெருங்கினான் எனும் தகவலை தெரிந்து கொள்ளும் செஸார், சிறையின் திறந்த வெளிப்பகுதியில் மலிக்கை தன் அடியாட்கள் மூலம் இழுத்து வரச் செய்கிறான்.

அயூப்புடன் நெருங்கிப் பழகி, அவன் இச்சைகளை தீர்த்து வைப்பதாக ஆசைகாட்டி, அவன் கிறங்கியிருக்கும் தருணத்தில் அவனை மலிக் கொலை செய்ய வேண்டும் என மலிக்கிடம் மிரட்டலாக கூறுகிறான் செஸார். இல்லையேல் அயூப்பை தாங்கள் கொலை செய்ய முயலும் தகவலை அறிந்த மலிக்கை தான் தீர்த்துக் கட்டி விடுவதாகவும் எச்சரிக்கிறான்.

article_prophete இக்கொலையை மலிக் வெற்றிகரமாக செய்து முடித்தால் சிறையில் அவன் பாதுகாப்பிற்கு தான் பொறுப்பேற்பதாகவும் செஸார் கூறுகிறான். அவர்களிடமிருந்து தப்ப வேறு வழியின்றி கொலையை தான் செய்வதாக கூறிவிடுகிறான் மலிக்.

செஸார் தன்னை நெருக்கடி செய்ததை சிறை உயர் அதிகாரியிடம் தெரிவிக்க விரும்பும் மலிக்கை, அவ்வுயர் அதிகாரியே செஸாரிடம் மாட்டி விடுகிறான். மலிக்கை, அவன் சிறை அறையிலேயே வைத்து பிளாஸ்டிக் பை ஒன்றினால் அவன் தலையை இறுக்க மூடி மூச்சுத் திணற வைக்கிறார்கள் செஸாரின் குண்டர்கள்.

சக கைதிகளுடன் சேர்ந்து இன்னொரு கைதியை தாக்கி சிறப்பு தண்டனைப் பிரிவிற்கு மாற்றலாகி செல்ல முயற்சிக்கும் மலிக்கின் நடவடிக்கையும் தோல்வியில் முடிகிறது. இதனை அறிந்து கொண்ட செஸார் மலிக்கை சிறை வாராந்தாவில் வைத்து நையப் புடைக்கிறான்.

தொடரும் நாட்களில் செஸாரின் அடியாள் ஒருவன், கன்னக் கதுப்புகளில் எப்படி ரகசியமாக பிளேட்டைப் பதுக்குவது என்பது பற்றிய பயிற்சியை மலிக்கிற்கு அளிக்கிறான். அயூப்பை எப்படி வெட்ட வேண்டும் என்பதும் அவனிற்கு கற்றுத்தரப்படுகிறது. தன் நாக்கும், கன்னக் கதுப்புகளும் வெட்டப்பட்டு ரத்தம் ஒழுக, ஒழுக தன் வாய்க்குள் கூரான பிளேட்டை வைத்து பயிற்சி எடுக்கிறான் மலிக். குறித்த ஒர் நாளில் அயூப்பின் அறைக்கு அவனைத் தேடிச்செல்லும் மலிக் அவனைக் கொலை செய்து விடுகிறான்.

கொலையைத் தொடர்ந்து செஸார் கோஷ்டியின் பாதுகாப்பின் கீழ் வந்து விடுகிறான் மலிக். அக்கோஷ்டியின் எடுபிடி வேலைகளை செய்பவனாகவும் அவன் செயல்படுகிறான். சிறையிலிருக்கும் அரபுக் கைதிகள், மலிக் செஸாரின் நாய் எனக்கூறி அவனை வெறுக்கிறார்கள். செஸாரின் இனவெறி கொண்ட கோர்ஸிக்கா முரடர்களோ மலிக் அரபு இனத்தை சேர்ந்தவன் என்பதால் அவனை ஒர் புழுப் போல் நடாத்துகிறார்கள். காலத்தின் ஓட்டத்தில் மலிக் எவ்வாறு செஸாரின் அரியணையைக் கவிழ்த்து, அச்சிறையின் பெரும் பலமாக மாறுகிறான் என்பது மீதிக்கதை.

un-prophete-2009-17386-327198369 ஒர் சாதரண குற்றவாளியாக சிறைக்கு வரும் ஒர் அரபு இளைஞன், சிறையிலிருந்தவாறே வெளியே தனக்கென ஒர் குற்ற சாம்ராஜ்யத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாது சிறையின் பெரும் பலமாக ஆட்சி செய்த மாஃபியா தாதா ஒருவனை எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை எந்த விட்டுக்கொடுத்தலும் இன்றி Un Prophète [தீர்க்கதரிசி] எனும் படமாக அருமையாக திரைப்படுத்தியிருக்கிறார் Jacques Audiard.

சிறையின் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் ஊழல்கள், சிறையில் காணப்படும் இனவெறிப் போக்குகள், கைதிகளின் தில்லு முல்லுகள், சிறையில் ஆயுள் கைதியாக வாழ்ந்து வரும் வன்முறை, சிறையொன்றின் உள் அரசியல், நிபந்தனைக்குட்பட்ட விடுதலையைக் கூட குற்றச் செயல்களின் பேரங்களிற்காக பயன்படுத்திக் கொள்ளும் குற்ற அமைப்புக்கள் என பிரான்சின் தற்கால சிறைச் சூழலொன்றை கூறு போட்டிருக்கிறார் இயக்குனர்.

நிபந்தனையுடன் கூடிய ஒரு நாள் விடுதலையின் பின் சிறைக்கு திரும்பும் மலிக், தன் காலணிகளை கழட்டும் போது அதனுள் நுழைந்திருந்த கடல் மணலைக் கண்டு அதனைத் தன் கரங்களில் கொட்டி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணம் சிறைக்கு வெளியே இருக்கும் வாழ்வின் மீதான ஏக்கத்தை சத்தமின்றி உரக்கச் சொல்லி செல்கிறது.

தான் தனியே இருப்பதாக உணரும் வேளைகளில் எல்லாம் மலிக், அயூப்பை தன் அருகில் கற்பனையாக உருவாக்கி கொண்டு உரையாடுவதும், சிறை அறையின் சிறிய ஒர் ஜன்னலின் வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் பனியை விரல்களால் அயூப்பும், மலிக்கும் தொட்டுச் சிலிர்ப்பதும் என ஒரு வன்முறை செறிந்த படத்தை சிறு கவிதைகளால் அழகாக்கி பார்வையாளனின் மனதை மெதுவாக தொட்டு விடுகிறார் ஜாக் ஒடியார்.

image-10163 வன்முறைச் செறிவுகளை நகைச்சுவை கலந்தும், கவர்ந்திழுக்கும் வசனங்களைப் புகுத்தியும் பிரம்மாண்டம் எனக் கொண்டாடும் சர்வதேசத் திரையுலகில் ஜாக் ஒடியார்ட் ஒர் எளிமையான கலைஞனாக எனக்குத் தெரிகிறார். 2009ம் ஆண்டின் கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்திற்கு Grand Prix Du Jury ஐ [ஜூரிகளின் சிறப்பு விருது] வழங்கிச் சிறப்பித்தார்கள். தங்கப் பனை விருதிற்கு அடுத்த அங்கீகாரம் வழங்கும் விருது இதுவாகும். ஜாக் ஒடியார், தற்கால பிரெஞ்சு சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

பிரெஞ்சு திரையுலகில் அரபு இனக் கலைஞர்களிற்கு தரப்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதில்லை. அவ்வழமையை உடைத்திருக்கிறது மிக வலிமையான மலிக் பாத்திரம். கனமும், உறுதியும் நிறைந்த இப்பாத்திரத்தை ஏற்றிருப்பவர் இளம் நடிகர் Tahar Rahim.

வெள்ளித்திரையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சவாலாக ஏற்றுக் கொண்டு எம்மைப் பிரம்மிக்க வைக்கிறார் ரஹீம். ஓடும் கண்களுடனும், தடுமாற்றத்துடனும் சிறையில் நுழையும் மலிக், படிப் படியாக மாற்றம் பெறுவதை தன் அபாரமான நடிப்பாலும், வித்தியாசம் காட்டும் உடல் பாஷையாலும் ரசிக்கச் செய்திருக்கிறார் அவர்.

செஸார் பாத்திரத்தில் வரும் Niels Arestrup, தான் ஒர் சிறந்த நடிகர் என்பதை தன் இயல்பான நடிப்பின் மூலம் தெளிவுபடுத்தி விடுகிறார். அவரது முக உணர்ச்சிகள் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கின்றன. அமைதியாக இருக்கும் அவர் சீறும் தருணங்களில் பார்வையாளன் கூடக் குறுகிப் போய்விடுகிறான்.

தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் குற்றவாளி ஒருவன், தன் சிறை வாழ்க்கையின் மூலம் திருந்தி, மீண்டும் சாதாரண வாழ்க்கையில் கலந்து கொள்ள முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சமூகத்தையும், சிறை அமைப்புக்களையும் பார்த்து ரகசியப் புன்னகை பூக்கிறான் மலிக் எனும் இத் தீர்க்கதரிசி. [****]

பிரெஞ்சு ட்ரெய்லர்

8 comments:

  1. இந்த படத்தை பற்றி பதிவிட்ட நீங்களே ஒரு தீர்க்க தரிசி தான் நண்பரே.

    அருமையான பதிவு. பள்ளி தோழனுடன் தோளோடு தோல் சேர்த்து நடந்து கொண்டே செய்யும் உரையாடலை போல இருப்பதே உங்கள் பதிவுகளின் சிறப்பு.

    தங்கப் பானை? ரசித்தேன்.

    ReplyDelete
  2. Fantastic review, even though it was a bit too long!

    ReplyDelete
  3. கனவுகளின் காதலரே,

    உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் புதியதோர் உலகினை எங்களுக்கு அறிமுகப் படுத்து கின்றன. நல்ல கதைகளையும், நாவல்களையும், திரைப்படங்களையும் தொடர்ந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தும் உங்களுக்கு நன்றிகள் பல.

    அடுத்ததாக ஒரு சிறிய விளம்பரம் - நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்?

    காமிக்ஸ் காதலன்
    பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
    யார் இந்த மரண அடி மல்லப்பா?

    ReplyDelete
  4. //தன் காலணிகளை கழட்டும் போது அதனுள் நுழைந்திருந்த கடல் மணலைக் கண்டு அதனைத் தன் கரங்களில் கொட்டி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணம் சிறைக்கு வெளியே இருக்கும் வாழ்வின் மீதான ஏக்கத்தை சத்தமின்றி உரக்கச் சொல்லி செல்கிறது//
    இப்பதிவின் முக்கியமான வரிகள்.
    அருமையான பதிவு நண்பரே, ஒவ்வொரு பதிவும் வேறு வேறு களத்தை அறிமுகம் செய்கிறது .
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும்....

    ReplyDelete
  5. அன்பு நண்பரே,

    காலணிக்குள் உறங்கும் கடல்மணல். தயவுசெய்து இதை ப்ரென்ஞ் மொழியில் மொழி பெயர்த்து சொல்ல முடியுமா? அற்புதமான தலைப்பு.

    சுதந்திரம் என்பது அடக்குமுறையின்போது தான் உணரப்படும் விஷயமாக உள்ளது. நகைச்சுவை திரைப்படங்களையும் விமர்சனம் செய்யுங்கள்.

    இந்த படம் எங்கள் கேப்டன் நடித்து விரைவில் வெளிவந்து தங்க ஆலமரம் விருது வாங்கும் நாள் விரைவில் வரும்.

    ReplyDelete
  6. நண்பர் ஜாலிஜம்ப்பர் அவர்களே, உங்கள் கனிவான முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி, தங்கப் பானை அல்ல தங்கப்பனை என்று இருந்தது, இப்போது திருத்தப்பட்டிருக்கிறது நன்றி நண்பரே.

    நண்பர் ஜோ அவர்களே, உங்கள் கருத்திற்கு நன்றி, வழமையாகவே என் பதிவுகள் சற்று நீண்டவைதான், பொறுமையாக வாசித்த உங்களிற்கு என் நன்றி.

    காமிக்ஸ் காதலரே வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி, உங்கள் புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள். கலக்குங்கள் நண்பரே.

    நண்பர் வேல்கண்ணன் அவர்களே, அந்தக் காட்சி என் மனதை விட்டு நீங்காது நின்றது. அதனையே வரிகளாக்கினேன், உங்களிற்கு பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே,கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ஜோஸ், இதனை சொல்லிற்கு சொல் நேரடியாக பிரென்ஞ்சில் மொழி பெயர்த்தால், தமிழில் கிடைக்கும் சுகம் கிடைக்காது போகும். இல்லை என்றால்தானே அதன் அருமை புரிகிறது[ உ-ம், காதல், ரஃபிக் மன்னிக்கவும்] சுதந்திரமும் அப்படித்தான் போலும். நாங்களும் முழுச்சுதந்திரந்துடன் தானா இருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்பிப்பாருங்கள் ஜோஸ்!! கேப்டன் நடிக்கும் படத்தின் தலைப்பையும் நீங்கள் கூறியிருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.நிச்சயமாக கான் விழாவில் ஆலமர விருது ஒன்றை உருவாக்கச் சொலி அவர்களை இப்போதே எச்சரித்து விடுகிறேன். இதற்கு பின்பு கான் விழா காணாது போனால் நான் பொறுப்பல்ல. தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  7. காதலரே, இந்த முறை பிரஞ்ச் சினிமாவா, அமர்க்களபடுத்துங்கள். தலைப்பே ஒரு வித ரம்மியத்தை பதிவிற்கு சேர்த்து விட்டது.

    ஒரு தனிமைப்பட்ட மனிதன் மனதில் எழும் போராட்டாங்களை மையமாக கொண்டு பிண்ணபட்டுள்ள ஒரு திரைக்காவியத்திற்கு அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.

    // சிறையில் ஒன்று வலியவனாக இருக்க வேண்டும் அல்லது வலியவன் ஒருவனது பாதுகாப்பின் கீழே இருக்க வேண்டும் //
    // சிறையில் எப்போதும் திறந்திருக்கும் காதுகள் வழியாக //

    உண்மையின் காரம் கடுத்தாலும், வேதனையான நிதர்சனம்.

    அந்த அமைதியான முதுமை தோற்றத்திற்குள் ஒரு ரவுடி கோஸ்டியின் தலைமையா என்று வியக்க வைக்கிறார் செஸார்..... அரியணையில் அவர் அமர்ந்திருக்கும் போதும் அவரின் தொங்கிய தோள்களில் அவர் சுமக்கும் பாரத்தை இயக்குனர் உணர்த்தியிருக்கிறாரோ என்று எண்ணுகிறேன்.

    இத்தனை கலவர சித்தாந்தங்களில் நடுவே, தான் கொலை செய்தவனையே மானசீக நண்பனாக கொண்டு உரையாடுவதாக இயக்குனர் கதையமைத்து இருப்பது, மலிக் இன்னும் தன் குழந்தைபருவத்தை மனதளவில் இழக்கவில்லை என்று பறைசாற்றுகிறார் போல.

    // என பிரான்சின் தற்கால சிறைச் சூழலொன்றை கூறு போட்டிருக்கிறார் இயக்குனர் //
    இது பிரான்ஸில் மட்டுமா, நம் ஊரிலும் நடக்கும் தினசரி கூத்துதான்.

    // கழட்டும் போது அதனுள் நுழைந்திருந்த கடல் மணலைக் கண்டு அதனைத் தன் கரங்களில் கொட்டி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணம் //

    பிரிவு ஆழமான எண்ணங்களை மனதில் விதைக்கும் என்பதை வார்த்தைகளில் செதுக்கியுள்ளீர்கள்.

    நல்ல வேளை இயக்குனரின் பெயருக்கான சரியான உச்சரிப்பை தந்தீர்கள்.. இல்லையென்றால் ஜாக்கூஸ் ஆடியார்டு, என்று அடியார் பட்டம் கொடுத்திருப்பேன்... ஆங்கில வார்த்தைகளை பிரஞ்ச் தொனியில் உச்சரிப்பதில் ஒரு தனி கிக் இருப்பது உண்மையிலும் உண்மை. :)

    நண்பரே, நீங்கள் விவரித்த ஆரம்பகட்ட சிறை வாழ்க்கை விடயங்கள், எனக்கு ஸ்டாலோன் நடித்த லாக் அப் படத்தை நியாபகபடுத்தியது. அந்த படம் ஆர்வலர்களால் மொக்கை என்று வர்ணிக்கபட்டாலும், திருந்தி வாழ உருவகபடுத்திய சிறைச்சாலைகள் எப்படி ஒரு மனிதனை வன்முறைக்கு தள்ளும் என்பதை தெளிவாக எடுத்து காட்டியிருந்ததாக என் எண்ணம்.

    ஒவ்வொரு முறையும் பெரும்பான்மை சினிமா ரசிகர்களின் பார்வையில் விடுபட்டு போக கூடிய, அதே நேரத்தில் அருமையான கலைநயம் கொண்ட படங்களை எப்படி நீங்கள் மட்டும் தேர்வு செய்கிறீர்களோ... தொடர்ந்து கலக்குங்கள், காதலரே.

    பி.கு.: ஆமாம், "காதல் - ரஃபிக்" என்று முண்ணுக்கு பின் முரணாண Oxymoron வார்த்தை பிரயோகம்.... காதலர் சித்து விளையாட்டா ? :) எங்கள் ஆசான் கேப்டனிடம் முறை இட போகிறேன்.... அவர் பார்டர் விட்டு பார்டர் கூட பாய்வார் ஜாக்கிரதை :)

    ReplyDelete
  8. ரஃபிக், முதலில் தீர்க்கதரிசி என்றுதான் தலைப்பிட்டிருந்தேன், பின்புதான் இந்த தலைப்பு வந்து சேர்ந்து கொண்டது.

    செஸார் தனிமைப்பட்டுப்போகும் காலம் ஒன்றில் வரும் காட்சியது, அவரது தளர்ச்சி அதில் தெளிவாக தெரிகிறது.

    மலிக் தன் உள்மனத்துடன் பேசிக் கொள்வதையே இங்கு அய்யூப் உருவாக காடியிருக்கிறார் இயக்குனர். சிறு குழந்தைகளும் கூட தங்கள்பாட்டில் பேசித்திரிவதும் உண்மையே.

    எல்லா நாடுகளின் சிறைச்சூழல்களும் ஒரே மாதிரியாக தோற்றம் தருவதற்கு உலககெங்கும் வேகமாகப் பரவிவிட்ட குற்றநுட்பங்களை காரணமாகக் கொள்ளலாம்.

    லாக் அப் படத்தை நானும் பார்த்திருக்கிறேன், சிறையில் அவர்கள் உருவாக்கும் காரொன்றினை வில்லன்கள் நொருக்குவது நினைவிற்கு வருகிறது.

    ரஃபிக், நான் எதனையும் தேர்ந்தெடுப்பதில்லை, சென்ற ஞாயிறு கூட டிம் பெர்ட்டனின் தயாரிப்பில் உருவாகிய "9" எனும் அனிமேஷன் படத்தைப் பார்த்து நொந்து போயிருக்கிறேன். பார்க்கும் திரைப்படம் எழுதத்தூண்டினால் எழுதுகிறேன் அவ்வளவே.

    காதல் பற்றிப் பேசினால் உங்களிடம்தான் எவ்வளவு அடக்கம் சும்மாவா சொன்னார்கள் நிறைகுடம் தழும்பாது என்று :))

    கேப்டன் பார்டர் விட்டு பார்டர் பாய்ந்து வந்து என்னை துவைத்து எடுப்பதை ஒர் பதிவாக போட்டுவிட்டால் போயிற்று. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete