Thursday, August 12, 2010

விம்மும் நாய்கள்


பந்தயத்தில் பொருதும் நாயை துப்பாக்கியால் சுடுவதிலிருந்து, குறிபார்த்து அடித்ததும் சிதறும் கோலிக் குண்டுகள்போல் திசையெங்கும் நிகழ்வுகள் ஓட ஆரம்பிக்கின்றன.

மூன்று வாழ்க்கைகளை அவைகளை சுற்றிவரும் நாய்களுடன், வெவ்வேறு நிலைகளிலிருந்து பார்வையாளனிடம் எடுத்து வரும் மெக்ஸிக்க இயக்குனர் Alejandro Gonzalez Inarritu வின் திரைப்படமான Amores Perros [நாய்க் காதல்] சிரமங்கள் ஏதுமின்றி அதிர, நெகிழ, கலங்க வைக்கிறது. மூன்று வாழ்க்கைகளும் வேறுவேறு எனிலும் குறித்த ஒரு தருணத்தில் அவை தம்மில் சந்திந்து மீள்கின்றன எனலாம்.

ஒழுக்கநெறிகளிற்கு பொருந்தாது, தன் சகோதரனின் மனைவியின்மீது வாலிபன் ஒருவன் கொண்டுள்ள காதல். தன் குடும்ப வாழ்வில் அன்பைக் காணமுடியாது, தன் மனைவியைத் தாண்டி அழகான ஆசைநாயகி ஒருத்தி மீது ஒருவன் கொள்ளும் காதல். எதை உதற முடிந்தாலும் வானத்தை எம்மேல் இருந்து உதறமுடியாது என்பதுபோல் தன் மகள்மீது ஒரு தந்தை கொண்ட அன்பு. இவையாவும் கதையின் ஒரு தருணத்தில் ஒரு புள்ளியில் தொட்டுச் செல்கின்றன. இவர்கள் அனைவரையும் சுற்றி நாய்கள் இருக்கின்றன.

தன் சகோதரனின் மனைவிமீது காதல் கொள்ளும் வாலிபன், அவன் விரும்பிய வாழ்வை அடைய அவன் பேணிவளர்க்கும் நாய், நாய்ச்சண்டைகளில் வெற்றி பெற்று அவனிற்கு உதவுகிறது. ஆனால் பின்பு துரோகத்தின் கடியை வலியுடன் அவன் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நாயானது துப்பாக்கியால் சுடப்படும்போது அவனது கனவுகள் புதைகுழிகளில் விழித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன் காதலை அவன் மீண்டும் நெருங்கி தன் வாலை ஆட்டியபோதும்கூட அவன் தொடரும் பயணத்தில் தனிமையே அவனுடன் பயணிக்க காத்திருக்கிறது. கண்ணீரை கண்டு தனிமை ஓடிவிடுவதில்லை. மாறாக வழியும் கண்ணீரை பெரும்தாகத்துடன் நக்கி அது தாகம் தீர்க்கும்.

ஆசைநாயகியின் செல்ல நாய், புதிதாக அவர்கள் குடிபுகுந்த வீட்டின் ஒரு குழியில் ஓடி மறைந்தபின்பாக அந்த மனிதனின் காதல் வாழ்க்கை தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிறது. வாழ்க்கையின் குழிகளில் திடீரென நிரம்பும் வெறுமைகளை எதைக்கொண்டு வெளியே எடுக்கலாம்? இருள்கவிய ஆரம்பித்து விட்ட மனப்பரப்புக்களினை நோக்கி நாலு கால்களில் விரைந்து நெருங்கி வரும் அன்பும், காதலுமே புற்தரைகளின் பறவைக்கீத காலைகளை அங்கு இசைக்க வைக்ககூடும்.

amores_l துப்பாக்கியால் சுடப்பட்ட நாயானது தன் மகளின் நினைவால் வாடும் மனிதனின் கைகளை வந்தடைந்தபின்பாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வுடன் அது மறைமுகமாக மோத ஆரம்பித்துவிடுகிறது. கடந்த காலம் எவ்வாறாக இருப்பினும் அன்பு அம்மனிதனை செலுத்தும் திசையில் அவன் எடுத்து வைக்கும் முதல் அடி புன்னகையுடன் ஆரம்பமாகிறது. அது தன் ஜோடிப்புன்னகையை கண்டடைய பாதையின் ஓரங்களில் அரும்பும் பாசத்தின் வெதுவெதுப்பான சுவடுகள் உதவிடும்.

அன்புடன் வளர்க்கும் நாய்கள் எதிர்பாராதவிதமாக கடித்துவிடுவது போலவே வாழ்க்கையின் நிகழ்வுகளும் இம்மனிதர்களை கடந்து செல்கின்றன. அவர்கள் மீது காயங்களையும், பற்தடங்களையும் அவை பதிக்கின்றன. எவை வாழ்க்கைகளின் மீது மண்ணை அள்ளிப் போடுபவையோ, அவை வழியேதான் ஒளிபூசிய புதியதொரு துவக்கத்தின் நாணம் கொண்ட சிரிப்பும் காத்திருக்கிறது.

பந்தயத்தில் வெற்றிகொள்ள வெறித்தனமாக மோதும் நாய்கள் போலவே மனிதர்களும் பணத்திற்காகவும், வெற்றிக்காகவும், புகழிற்காகவும், அன்பிற்காகவும் மோதிக்கொள்கிறார்கள். காதலிற்காக உறுமுகிறார்கள். அறங்கள் குறித்த கலக்கங்கள் ஏதுமின்றி புணர்கிறார்கள். எந்த இலக்குமின்றி வாழ்க்கையின் பக்கங்களில் எழுதிய கனங்களை தள்ளுவண்டியில் தள்ளியபடியே தெருவில் அலைகிறார்கள்.படுக்கை அறைக்கு வெளியே உறங்குகிறார்கள். படுக்கை அறைக்கதவுகளை பிறாண்டுகிறார்கள். குண்டடிபட்டு சாகிறார்கள். நாய்கள் ஏக்கம் கொண்டு விம்முவதைப்போலவே மனிதர்களின் உணர்வுகளும் விம்முகின்றன. நாய்களின் அரூப அவதாரங்களாக அவர்கள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதன் தப்பித்து ஓடலாம், துரோகங்களை எதிர்கொள்ளலாம், புகழின் அதீத உயரங்களிலிருந்து உருகும் பனியின் கண்சிமிட்டல்களாக கீழே இறக்கப்படலாம், அர்த்தமற்ற வாழ்வின் மாறாத வட்டச்சுழலின் யந்திரச்சுற்றிலிருந்து துள்ளும் மீனென விடுபட்டு வேறு ஒரு சுழலில் பயணிக்க ஆரம்பிக்கலாம். ஆனால் காதலும், அன்பும், பிரியமும் அவனைவிட்டு பிரியாது அவன் கூடவே ஒரு நாய்போல் அவன் கால்களை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அவைதான் எல்லா வலிகளையும், கண்ணீர்களையும் வறளச்செய்து அவன் முன்பாக கிளைகளென விரியும் வாழ்வின் முடிவற்ற பாதைகளின் கண்காணா எல்லைகள் வரையும் வினோத சித்திரங்களை கண்டடையும் அவன் பயணத்தில் அவன் அருகே பயணிக்கின்றன. அவனை மேலும் வாழச் சொல்கின்றன. நாய்கள் கடிக்கின்றன. ஈரலிப்பான தம் நாக்குகளினால் வருடிக்கொடுக்கவும் செய்கின்றன.

சற்று நீண்ட திரைப்படமாகவிருந்தாலும் தேர்ந்த நடிகர்கள், அழகியல் கரைந்த காட்சிமொழி, இசை, சிறப்பான இயக்கம் என Amores Perros நல்லதொரு அனுபவம். [***]

18 comments:

  1. ணா..
    செமத்தியா எழுதியிருக்கீங்க. இந்த படத்த பிட்டு பிட்டா பார்த்திருக்கேன். சீக்கிரமே முழுசா பார்க்க உங்க விமர்சனம் தூண்டுது.
    (உங்க சைடு பார் ரொம்ப நீளமா இருக்குறதுனால (அதுவும் லேபல்ஸ்) ஸ்லோ கனெக்சன் லோட் ஆகு லேட் ஆகுது. ஏதாவது செய்ய முடியுமா)

    ReplyDelete
  2. நண்பரே
    மிக அருமையான படத்துக்கு,மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.இயக்குனர் சார்லஸ் அமெர்ரோஸ் பெர்ரோஸுக்கு யாரேனும் எழுதியிருக்கிறாரா?என பதிவில் கேட்டார்,அவருக்கு இதை சொல்கிறேன்.

    ReplyDelete
  3. Hmm

    me the 4th

    இந்த முறை தலைவர் மீ த ஃபர்ஸ்ட்டு! போட்டு கலக்குறார்

    // மனிதன் தப்பித்து ஓடலாம், துரோகங்களை எதிர்கொள்ளலாம், புகழின் அதீத உயரங்களிலிருந்து உருகும் பனியின் கண்சிமிட்டல்களாக கீழே இறக்கப்படலாம், அர்த்தமற்ற வாழ்வின் மாறாத வட்டச்சுழலின் யந்திரச்சுற்றிலிருந்து துள்ளும் மீனென விடுபட்டு வேறு ஒரு சுழலில் பயணிக்க ஆரம்பிக்கலாம். ஆனால் காதலும், அன்பும், பிரியமும் அவனைவிட்டு பிரியாது அவன் கூடவே ஒரு நாய்போல் அவன் கால்களை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. //

    காதலரின் பஞ்ச்

    .

    ReplyDelete
  4. // ஆனால் காதலும், அன்பும், பிரியமும் அவனைவிட்டு பிரியாது அவன் கூடவே ஒரு நாய்போல் அவன் கால்களை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அவைதான் எல்லா வலிகளையும், கண்ணீர்களையும் வறளச்செய்து அவன் முன்பாக கிளைகளென விரியும் வாழ்வின் முடிவற்ற பாதைகளின் கண்காணா எல்லைகள் வரையும் வினோத சித்திரங்களை கண்டடையும் அவன் பயணத்தில் அவன் அருகே பயணிக்கின்றன. //


    அருமை.சமீபத்தில் நான் பார்த்த அருமையான படங்களில் இதுவும் ஒன்று.மற்றொன்று a tale of two sisters.முடிஞ்சா பாருங்க. :)
    அப்புறம்,இதில் அந்தக் கிழவரின் நடிப்பு,குறிப்பாக கடைசி சில நிமிடங்கள்,கதாப்பாத்திரத்தோடு கலந்த உன்மத்த நிலை.தெருவில் இலக்கின்றி திரியும் ஒருவன், தகப்பன் என்ற ஸ்தானத்தில்,காட்டும் வலி ,அந்த கடைசி சில நிமிடங்கள்...

    சொல்ல வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  5. இன்றுதான் டிவிடி வாங்கி வந்தேன். அதற்குள் இங்கே பதிவா?? அருமை அருமை படத்தை பார்த்துவிடுகின்றேன்.

    ReplyDelete
  6. மீ த பேக் !!

    அட்டகாசம் !! அருமை !!

    இந்தப் படம், எனக்கு மிகப்பிடித்த ஒன்று. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத ஒரு கவிதை இது.

    குறிப்பாக, ஆரம்பக் காட்சிகளில், நாய்கள் சண்டையிட்டு, ரத்தம் தெளித்துக் கிடக்கும் அந்தத் தரையைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் ;-)

    ஒரு முக்கிய விஷயத்தை எழுதாமல் விட்டு விட்டீர்களே.. நமது மணீரத்னம், இப்படத்தை அட்டைக் காப்பியாக சுட்டு, (ஆய்)த எழுத்து என்ற மொக்கையை எடுத்தது பற்றி. . . ;-) பெயருக்கேற்ப அமைந்த படம் அது ;-)

    ReplyDelete
  7. நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் பெரிய படம் தான். ஆனா, அதுக்கு காரணமும் படத்துலயே இருக்குறதால நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  8. புதுமையாகத்தான் இருக்கிறது உங்களின் விமர்சனம் . படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது எழுத்துக்களில் . பகிர்வுக்கு நன்றி !
    ___________

    ReplyDelete
  9. இப்படத்தைப் பற்றி எழுத்தாளர் சாருவும் அடிக்கடி வியந்து கூறுவார். நல்லதொரு நடை.வார்த்தைகள் தானாக வந்து விழுகின்றதா அல்லது நேரமெடுத்து செதுக்குறீங்களான்னு தெரியல..ரொம்ப பெருமையா இருக்கு தேளு,காதலர் இன்னும் சில பதிவர்கள் வாழும் காலத்தில் வாழ்கிறேன்னு சொலிக்க........

    ReplyDelete
  10. நல்ல விமர்சனம்..நல்ல நடை...இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்காமலே வைத்திருக்கிறேன்..அவ்வப்போது எடுத்து பார்க்கலாமா என ஓட்டுவேன்....நல்லா இருக்காது போல இருக்கேன்னு விட்டுடுவேன்...இப்ப உங்க விமர்சனம் படிச்சதும் முடிவு பன்னிட்டேன்...சீக்கிரம் பாத்துடறேன்...

    ReplyDelete
  11. தலைவர் அவர்களின் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. லேபல்களை நீக்குவது குறித்து உடன் பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

    நண்பர் கீதப்ப்ரியன் அவர்களே மிக்க நன்றி.

    நண்பர் சிபி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, வயதானவர் மட்டுமல்ல நடிகர்கள் யாவருமே மிகையற்ற நடிப்பை வழங்கியதாகவே நான் கருதுகிறேன். உங்கள் வயதை அண்டியவர் என்பதால் அவரின் நடிப்பு உங்களை கவர்ந்திருக்கலாம். மேலும் கொரிய பிட்டு படங்களை பார்ப்பதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன்:))நீங்களே பதிவைப் போடுங்கள். இந்த திரைப்படத்திற்கும் உங்கள் பார்வையை இரு வருட இடைவெளிக்குள் எழுத மறக்காதீர்கள். தங்கள் மேலான கருத்துக்களிற்கு நன்றி :))

    நண்பர் ஜே, நீண்டகாலத்திற்கு பின்பு உங்களை கருத்துக்களத்தில் சந்திப்பது மகிழ்ச்சி. கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், ரத்த ரசிகன் என்ற பட்டப்பெயரை உங்களிற்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன்[ ஆனா அதுக்கு மட்டும்தான் நீங்கள் ரசிகர் என்று அர்த்தம்மில்லை :))] உண்மையில் இந்தப் படத்தினோடு மணியின் படத்தை ஒப்பிடுவது இப்படைப்பிற்கு அவமானத்தை தரும் ஒன்றாகவே நான் கருதுகிறேன் :)) மேலும் படத்தை பார்த்து முடித்துவிட்டு பின் பதிவை எழுத ஆரம்பித்தபோது ஆய்த எழுத்து பற்றிய நினைவே எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் பின்னோக்கி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் பனித்துளி சங்கர், நேரம் கிடைத்தால் பார்க்கத் தவறாதீர்கள், தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.

    நண்பர் மயில்ராவணன், புகழாதீர்கள் எனக்கு கூசுகிறது :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ரமேஷ், பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை ஒரு பதிவாக போடவேண்டுமென தாழ்மையான வேண்டுகோளை உங்கள் முன்வைக்கிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. நண்பரே,அந்தக் கிழவரை நான் பாராட்டுவதற்கு காரணம்,அவர் சிறிதே உங்களை நினைவுபடுத்துவதே.ஒருவேளை,நீங்கள் தான் பொறாமையில் பேசுகிறீர்களோ ? :)

    அப்புறம் கொரியா படங்கள் பிட்டு படங்கள் என்ற உமது வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.பயபுள்ளைக,ஒண்ணும் காட்ட மாட்டுராணுக. ;)

    பிறகு,பதிவு பற்றி...
    நீங்கள் தான் எழுதிவிட்டீர்களே! பின்னே எதற்கு மறுபடியும்?அந்நேரத்தில் தாங்கள் சொல்லும் சில கொரியா பிட்டுப் படங்களையோ,அல்லது ஏதேனும் மொக்கை புத்தகத்தையோ படிப்பேனே? :)

    ReplyDelete
  13. இந்த படத்தை பார்த்தபோது ஏற்பட்ட மன நிலையை உங்களின் வரிகளில் படித்த போதும் ஏற்படுகின்றன நண்பரே ,
    இதை விட வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை. நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  14. நண்பரே,
    அருமையான பதிவு.”கண்ணீரை கண்டு தனிமை ஓடிவிடுவதில்லை. மாறாக வழியும் கண்ணீரை பெரும்தாகத்துடன் நக்கி அது தாகம் தீர்க்கும்.” உள்ளத்தை உலுக்கும் உண்மையான வார்த்தைகள்!படம் பார்க்காமலேயே மனதில் ஒரு பாரத்தை ஏற்றி விட்டது உங்கள் விமர்சன நடை!

    ReplyDelete
  15. #

    * கீதப்ப்ரியன்|geethappriyan
    * ஆகஸ்ட் 12th, 2010

    * REPLY
    * QUOTE

    திரு.சார்லஸ்,
    நேரம் கிடைக்கையில் இந்த அமெர்ரோஸ் பெர்ர்ரோஸ் பதிவையும் பார்க்கவும்.நன்றி
    http://kanuvukalinkathalan.blogspot.com/2010/08/blog-post_12.html

    *
    o சார்லஸ்
    o ஆகஸ்ட் 14th, 2010
    o REPLY
    o QUOTE

    பரிந்துரைத்ததற்கு நன்றி கார்த்திகேயன். படித்தேன், பிடித்திருந்தது. அறிவுபூர்வமாக அலசாமல், உணர்வுபூர்வமாக அணுகுவதால் ஒரு கவித்துவ நடை கைகூடியிருக்கிறது.

    http://vaarthaikal.wordpress.com/2010/08/07/kaalathai-7/

    உங்கள் திரைப்பட விமர்சனத்துக்கு திரு.சார்லஸ் அவர்கள் சொன்ன கருத்து மேலே

    ReplyDelete
  16. Dear Sir

    As told by our Karunthel, Ayudha Ezhuthu is a very bad copy of this picture and all are praising him as the no.1 director of India.

    The screen play of the picture SAROJA by Venkat Prabhu is also of similar concept.

    With regards
    SS

    ReplyDelete
  17. நண்பர் வேல்கண்ணன் அவர்களே, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கேப் டைகர் அவர்களே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கீதப்ப்ரியண் அவர்களே தங்களிற்கும் திரு சார்லஸ் அவர்களிற்கும் என் நன்றிகள்.

    நண்பர் மணியன், தங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete