Wednesday, December 25, 2013

மணல்மேல் கட்டிய பாலம்

சிறுவயது முதலே நம் கலாச்சாரம் கதைகள் வழியாக தொன்மங்களை எம்மில் வேரூன்ற செய்திருக்கிறது. அவற்றை உண்மை என்பதாக இலகுவாக நம்பிட சிறுவயதில் அக்கதைகளின் தொடர்ச்சியான கேட்டல் வழிசேர்த்து இருக்கிறது. யேசுவின் திருப்பாடுகளையும், சூரன் போரையும் காட்சியாக கண்டு மகிழவும், மார்கழியின் திருப்பள்ளி எழுச்சி பஜனை மற்றும் கிறிஸ்துமஸ் கரோல் போன்றவற்றையும் தவறா நிகழ்வுகளாக வாழ்தடம் படம் பிடிக்க நான் வளர்ந்து வந்திருக்கிறேன். பள்ளிகளில் பாடங்களாகவும் இவை என்னுடன் வந்திருக்கின்றன. இவற்றை உண்மையான நிகழ்வுகளா இல்லை வெறும் கதைகளா என மனம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தோற்றுப் போவது என்பது மனதில் ரகசியமான ஒரு சலனத்தை உருவாக்கவே செய்திருக்கிறது. இத்தொன்மங்களை என் நாயக பிம்பங்களாக அல்லது வழிபாட்டின் வடிவங்களாக ஏற்றுக் கொள்ள பழக்கப்பட்டிருக்கிறேன். அப்பழக்கத்தினுடனான முறிவு என்பது வெகுவான காரணங்களை வேண்டி நிற்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
சு.கி. ஜெயகரன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பான மணல் மேல் கட்டிய பாலம் நாம் வாழ்வில் இன்னம் நம்பிக் கொண்டிருக்கும் சிலவற்றின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிற ஒரு நூலாகும். அல்லது நம்பிக்கை இழந்தவை பற்றி தகவல்கள் சிலவற்றை தெளிவாக்குகின்ற ஒரு தொகுப்பாகும். நிலவியல், தொல்லியல் போன்ற துறைசார் சான்றுகளுடன் ஜெயகரன்  தன் கருத்துக்களை கட்டுரைகளில் முன்வைக்கிறார். இதுவரை எம் மனதில் இடம்பெற்றிருந்த ஒரு பிம்பம் மீதான பார்வை இவர் கட்டுரைகளின் பின்பாக மாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் அப்பிம்பங்கள் இல்லாமலும் போய்விடுகிறது.
கட்டுரை தொகுப்பில் இடம்பெறும் முதல் கட்டுரையான மணல்மேல் கட்டிய பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் குறித்தது. சில வருடங்களின் முன் நாசா செய்மதி நிழற்படங்கள் துணையுடன் ராமர் கட்டிய பாலம் நிஜமே என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆய்வு முடிவுகளாலும், சான்றுகளாலும் இக்கட்டுரையில் எதிர் கொள்கிறார் ஜெயகரன். ராமர் பாலத்தை கட்டவில்லை என்றால் பாக் நீரிணையில் இருக்கும் அந்த கடலடி மணல் தட்டு என்ன? இதற்கான விளக்கத்தை தெளிவாக இக்கட்டுரை தருகிறது.
வேதங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறு ஒரு காலத்தில் ஜீவ நதியாக ஓடி இன்று மறைந்து போய்விட்டது என்பது ஒரு தகவல். ஹரிஜானா, ராஜாஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளை செய்மதி எடுத்த படங்கள் தரையில் இருந்து பார்க்கும்போது கண்ணிற்கு தென்படாத ஆற்றுப்படுகைகளை காட்டின. சரஸ்வதி ஆறு ஆர்வலர்கள் இதை தமக்கு கிடைத்த ஆதாரமாக கொண்டு வேதகாலம் சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானது எனும் கருத்தை பலப்படுத்த ஆரம்பித்தனர். ஜெயகரனின் சரஸ்வதி கலாச்சாரமும் சிந்துவெளி நாகரீகமும் எனும் கட்டுரை வேதகாலம் உண்மையிலேயே சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானதா என்பதை தெளிவாக்க முயல்கிறதுஆர்வலர்களின் ஆர்வக் குளறுபடிகள் குறித்தும் சொல்ல தயங்கவில்லை ஜெயகரன்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த நில நீட்சி என்ன என்பது பற்றி குமரிக்கண்டம்- லெமூரியாக் குழப்பம் கட்டுரையில் விரிவாக எழுதுகிறார் கட்டுரையாசிரியர். தமிழகத்தின் தெற்கே கண்டம் என அழைக்கப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பு இருந்ததா? குமரிக்கண்டம், மு எனும் நிலப்பரப்பு, லெமூரியாக் கண்டம் இவை எல்லாம் ஒன்றா? லெமூரியா எனும் கருத்தாக்கம் யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை ஆராய விழையும் ஜெயகரனின் கட்டுரை மரபு மரபாக பழந் தமிழ் இலக்கியம் கட்டி வைத்த கற்பனை அடுக்குகளை நொருக்கி விடுகிறது. கட்டுரை தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இது அமைகிறது.
காம்பே கடலடியில் கண்டுபிடிக்கப்பட்ட புரதான சிதைவுகள் வரலாற்றிற்கு முன்பான காலத்தவையா என்பதை தேட விழைகிறது காம்பே கடலுக்கடியில் ஒரு கட்டுக் கதையா? எனும் கட்டுரை. கடலடிக்கு எவ்வாறு படிவங்கள் வந்து சேர்ந்திருக்கும், கடலடி அகழாய்வு, நிலத்தடி அகழாய்வு இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாடுகள் என சுவையான தகவல்களுடன் காம்பே கடலடி சிதைவுகள் குறித்த கேள்விகளையும் ஜெயகரன் தன் வரிகளில் உருவாக்குகிறார்.
போளுவாம்பட்டி புலவர் . இராமசாமி, பேரூர் கருப்புசாமி இவர்கள் இருவரும் சேகரித்து வைத்திருந்த சுடுமண் ஓடுகளில் காணப்படும் எழுத்துக்கள், சித்திரங்கள், கிறுக்கெழுத்துக்கள், சங்கேதங்கள் போன்றவை பழந்தமிழ் எழுத்துக்களா? சங்க காலத்தவையா? என்பதை ஆராய்ந்து விடை காண்கிறது பேரூர் சுடு மண் ஓடுகள். ஆச்சர்யங்கள் நிறைந்த கட்டுரை இது. இராமசாமி, கருப்புசாமி இருவரினதும் திறமைகள் வியக்க வைப்பவையாக இருக்கின்றன.
சிலப்பதிகாரம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் சிலப்பதிகாரம் குறித்த வரலாற்று உண்மைகள் என்ன? சிலப்பதிகாரத்தின் சாயல் கொண்ட இரு பழந்தமிழ்க் கதைகள் எவை? இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் சகோதரராக இருக்க வாய்ப்புக்கள் உண்டா? சிலப்பதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால் எனும் கட்டுரை.
Chariots of Gods எனும் பிரபல நூலை எழுதிய எரிக் வோன் டேனிகன், வேற்றுலகிலிருந்து பூமிக்கு வருகை தந்த கடவுளர்களின் உதவியாலேயே சில நாகரீங்கள் பரிணாமம் பெற்றது எனும் கருத்தை கொண்டவர். கடவுளர்களின் உதவி இல்லாவிடில் பிரமிடுகள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனும் கருத்தை முன் வைப்பவர் இவர். எரிக் வொன் டெனிகனின் புரட்டுக்கள், அவர் முன் வைக்கும் வேற்றுலக கடவுளர்களின் பூமி விஜயத்திற்கு முரணனா சில சான்றுகளையும், கருத்துக்களையும் ஜெயகரன் ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் கட்டுரையில் பகிர்கிறார். சுவையான கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பேன். எரிக் வோன் டேனிகனின் கருத்துக்களில் இருக்கும் இனவுயர்வுவாதம் குறித்தும் ஜெயகரன் சிறிதாக விளக்கம் தருகிறார்.

தொடரும் கட்டுரைகள், பப்புவா நியுகினியில் எரிமலை விஜயம், தமிழகத்தில் திடீரென தோன்றிய கற்பாறைகளின் மர்மம், கொங்கு நாட்டில் நிலத்தடி நீர் போன்றவை பற்றி கூறுகின்றன. ஆனால் இவை மேற்சொன்ன கட்டுரைகளின் அளவிற்கு விறுவிறுப்பானவை அல்ல. எளிய தமிழில், ஒரு புலன் விசாரணை போல விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் நிலவியல், தொல்லியல், வரலாற்றியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வாசகர்களை திருப்திப்படுத்தும். டாவின்சி கோட் போல தமிழிலும் கதைகள் எழுதலாம் எனும் எண்ணத்தை இக்கட்டுரை தொகுதி பலப்படுத்தவே செய்கிறது. ராமர் பாலம் கட்டினாரா எனும் கேள்விக்கு இனி உங்கள் சிலரின் பதில்களிலும் மாற்றம் வரக்கூடும். சிற்றிதழ்களில் கட்டுரைகளாக வந்தவற்றை தொகுத்து காலச்சுவடு நூலாக வெளியிட்டு இருக்கிறது.

Monday, December 16, 2013

Imperium & The Hobbit: The Desolation of Smaug


Imperium

சுருக்கெழுத்து என்பது குறிந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் காரியதரிசிகளிற்கும், பத்திரிகையாளர்களிற்கும் தட்டச்சுக் கலையுடன் சுருக்கெழுத்துக் கலையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. Robert Harris ன் நாவலான IMPERIUM ஐ படிக்கும்வரை சுருக்கெழுத்தை சீரான முறையில் உபயோகிப்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

இம்பிரியம் என்பது அதிகாரம் என்பதை குறிக்கும் சொல்லாகும். பண்டைய ரோமில் இதுவே உச்ச அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக இருந்தது. சாதாரண செனெட்டராக இருந்து பின் இம்பிரியம் எனும் உச்ச அதிகாரத்தை கொண்ட Consul பதவியை அடைவது வரை பிரபல பேச்சாளரும், வழக்காடுனருமான Cicero வின் கதையை நாவல் கொண்டிருக்கிறது.

நாவலின் கதை சொல்லியாக Tiro. சிசோரோவின் அடிமை + காரியதரிசி. இவரே சுருக்கெழுத்து முறையையும் அதை தகுந்த விதத்தில் உபயோக்கிக்கும் விதத்தையும் கண்டுபிடித்ததாக நாவல் கூறுகிறது. Tironian Notes என அழைக்கப்படும் குறியீடுகளை இவர் உருவாக்கி சிசோரோவின் பேச்சுக்களை சுருக்கெழுத்து முறையில் பிரதி செய்தார்.

நாவலின் ஆச்சர்யமான அம்சம், இன்று அரசியலில் நாம் எதை கேவலம் எனக் கருதுகிறோமோ அது அன்று இருந்திருக்கிறது என்பதுதான். கொடும்பாவியில் இருந்து மேடைப்பேச்சு வரை, வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது முதல், ரவுடித்தனம் வரை என ஏறக்குறைய எல்லாமே அன்றைய ரோம் அரசியலில் இருந்திருக்கிறது.

காலங்கள் மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும், மனிதகுலம் முன்னேற்றம் கண்டாலும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும், அதை சூழ உள்ள தந்திரங்களும், அதிகாரத்தை அடைவதற்காக ஒருவர் செய்யக்கூடிய செயல்களும் அதிக மாற்றத்தை கண்டிடவில்லை. காலம் எனும் மாற்றத்துடன் அதிகாரத்திற்கான வேட்கை ஒரு மாறிலியாக இருந்து கொண்டே இருக்கிறது.

எவ்வளவுதான் ஒரு மனிதன் நேர்மையான லட்சியங்களுடன் தன் அரசியல் பயணங்களை ஆரம்பித்தாலும் அதிகாரத்தை வெல்லுவதற்கு அவன் சமரசங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் நாவல் தெளிவாக கூறுகிறது. ஊடவே கதை சொல்லியும் அடிமையுமான டைரோவின் வாழ்வையும் அது சிறிய சித்திரமாக வரைகிறது.

ராபார்ட் ஹாரிஸின் எழுத்துக்கள் வெகுஜன வாசிப்பிற்குரியவை. ஆனால் மிக சிறப்பான எழுத்துநடையை அவர் கொண்டிருக்கிறார். அவர் கதை சொல்லலில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை. எடுத்த விடயத்திற்கு நேரே வாசகனை இட்டு செல்லும் எழுத்துக்கள் அவை.
பண்டைய ரோமின் அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்த ஒரு தெளிவான, எளிதான பார்வையை முன்வைக்கும் நாவல், பொம்பெய், சீசர் , ஹார்டென்சியஸ் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பாத்திரங்கள் மீதான ஒருவரின் பார்வையையும் மாற்றம் கொள்ள வைக்கிறது

The Hobbit: The Desolation of Smaug

மாதம்தோறும் நீட்டுவதிலும் சுருக்குவதிலும் சிறப்பு பாண்டித்துதுவம் பெற்ற ஒரு நிபுணர் அவர்களின் திறமைகளுடன் காலம் தள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக பீட்டர் ஜாக்சன் திரைக்கதை எழுதுவதில் அந்நிபுணர் உதவியை நாடவில்லை என்பது ஹாபிட் செய்த புண்ணியம்.

ஹாபிட்டில் எனக்கு சிறிது ஏமாற்றத்தை தந்தவற்றை முதலில் சொல்கிறேன். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் உள்ளதைப் போன்ற நிலவியல் வர்ணணைகள் ஹாபிட்டில் இல்லை. ஹாபிட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் என்னைக் கவர்ந்த நிலவியல் இப்பாகத்தில் என்னைக் கவரவில்லை.

நாவலில் மிர்க்வூட் மற்றும் எல்ஃபுகள் குறித்த பகுதிகள் சிறிது நீண்டவையாக இருக்கும் திரைக்கதையில் அவை சுருக்கப்பட்டுவிட்டன. இவையே எனக்கு சிறிய ஏமாற்றத்தை தந்தவை குறிப்பாக மிர்க்வூட்டில் நான் அதிகம் எதிர்பார்த்து இருந்தேன் என்பதும் காரணமாக இருக்கலாம்.

இதற்கு பதிலாக கண்டால்ஃப் தீய சக்தி ஒன்றினை தேடிச் செல்லும் பகுதி விரிவாக்கப்பட்டிருக்கிறது. புதிதாக காதல் இழை ஒன்றும் நெய்யப்பட்டு இருக்கிறது. லெகோலாஸின் சாகஸங்களும் விறுவிறுப்பை எடுத்துவருகிறது. இவை எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. நாவலைத் தாண்டியும் புதியதொரு அனுபவத்தை தருகின்றன.

திரைக்கதை படிப்படியாக வேகம் பெற்று செல்லும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாய்ந்தோடும் ஆற்றில் நடக்கும் சண்டைக் காட்சி அபாரம். நல்லதொரு கற்பனையில் அம்மோதல் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. லோன்லி மவுண்டனின் ஆழங்களினுள் ஸ்மொக்கின் பதுங்கிடம் வந்தததும் திரைப்படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது.

ஸ்மொக், அட்டகாசம், அற்புதம், அதகளம். நான் எதிர்பார்த்து சென்றதைவிட அதிகமாகவே எனக்கு கிடைத்தது. ஸ்மொக்கின் சுவாலை வீச்சை ஆழ்ந்து ரசித்தேன். பல உலக திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கான உயர் விருதுகளை வாங்கும் திறமை தலைவரில் இருக்கிறது. நாவலில் இல்லாத ஒரு சம்பவத்தையும் உருக்கி ஊற்றி அதில் ஸ்மொக்கை முங்க வைத்திருக்கிறார்கள். பலே பலே பலே. இப்படியே கதையை கொண்டு சென்று திரையை இருளாக்கி விடுகிறார்கள். அடடா இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என முனகவும் வைத்து விடுகிறார்கள்.

மொத்தத்தில் ஹாபிட் 2 நல்லதொரு மிகைபுனை சாகசம். இச்சிறு நாவலை எப்படி மூன்று பாகங்களாக விரிவாக்கப் போகிறார்கள் என நான் எண்ணியிருந்த ஐயங்கள் எல்லாம் இன்றுடன் இல்லாமல் போய்விட்டன. ஹாபிட் எனும் சிறு நாவலையே மூன்று பாகங்களாக எடுக்க முடிகின்றபோது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனும் நாவலைக்கூட ஹாபிட்டை விட சற்று பெரிதானதாக எழுதியிருக்க முடியும் என்பதும் உண்மையே!

Sunday, December 15, 2013

Farseer 2 &3

Royal Assassin

உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் மலை ராஜ்ஜியத்தில் தன் தோல்விகளை எண்ணிப்பார்க்கும் ராஜகொலைஞன் ஃபிட்ஸுடனேயே தொலைதிருஷ்டியர் முப்பாக நாவல் வரிசையின் இரண்டாம் பாகத்தை திறக்கிறார் கதாசிரியை ராபின் ஹாப்.

ஆனால் அந்த உடல் நிலையுடனேயே ஃபிட்ஸ் மீண்டும் பக்கீப்பிற்கு வந்தாக வேண்டியிருக்கிறது. மர்மமான ஒரு அயர்ச்சியால் வாடும் அரசன் , கரையோர நிலங்களை சூறையாடி மகிழும் செங்கல கொள்ளையர்களை எதிர்த்து நிற்க துடிக்கும்  வெரிட்டி, தன்னிடம் அதிகாரம் வர வேண்டும் என காரியமாற்றும் ரீகல் இவர்களின் மத்தியில் ராஜகொலைஞன் ஃபிட்ஸ் தன் ராஜ விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவன் தர தயாராக உள்ள விலை என்ன? அது அவனை என்ன நிலைக்கு தள்ளப் போகிறது?

இவற்றிற்கான விடையை தன் ஆடம்பரமற்ற வரிகளில் நாவலில் கொணர்கிறார் ஹாப். காதல், வீரம், தியாகம், விசுவாசம், சதிகள் என்பவற்றின் மத்தியில் தன் முடிவை நோக்கி விரைகிறான் ஃபிட்ஸ். பக்கீப் எனும் இடத்தை விட்டு நகராது அதனுள்ளேயே கதையையும் உணர்வுகளையும் வாசகனுடன் மோத விடுகிறார் ஹாப். அவர் எழுத்துக்களை எல்லாராலும் ரசிக்க முடியாது என்பது தெளிவு. ரசிக்க முடிந்தால் அதன் சுவை இனிது என்பது ஒருவர் பெறும் அறிவு.

காதல் காட்சிகளில் மீள்கூறல் சற்று அயர்ச்சியை தருகிறது. ஹாப்பின் எழுத்துக்களில் மீள்கூறல் அலல்து எழுதல் ஒரு பண்பாகவே இருக்கிறது என்பேன். விலங்குகள் மீதான பார்வையை தன் எழுத்துக்களில் உயர செய்யவும் ஹாப் முயல்கிறார். விலங்கிற்கும் மனிதனிற்குமான உணர்வு சார்ந்த உறவின் வலிமையை அவர் தன் நாவலில் முக்கியமான ஒரு அங்கமாக்கியிருக்கிறார்.

கரையோர நிலங்களை தாக்கியழிக்கும் செங்கல கொள்ளையர்கள், அவர்களால் உணர்விலிகளாக ஆக்கப்படும் அந்நிலவாழ் மனிதர்கள், மேலும் இந்நிகழ்வுகளின் பின்னிருக்கும் மர்மம் இப்பாகத்திலும் ஒரு நீளும் இழையாகவே இருக்கிறது. பட்டத்திற்குரிய இளவரசன் வெரிட்டி செங்கல தாக்குதல்களிற்கு எதிராக எடுக்க விழையும் நடவடிக்கைகள், அவற்றில் ஃபிட்ஸின் பங்கு, இவை வழியாக ஆழமாகும் அவர்களிற்கிடையிலான பிணைப்பு என நகரும் கதையில் ஃபிட்ஸின் விசுவாசம் யாரிற்கானது என்பது கேள்வியான ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. வெரிட்டியின் மனைவி கெட்ரிக்கன் பக்கீப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு ராணியாக ஆகுவதற்குரிய ஆரம்ப அறிகுறிகளும் நாவலில் சொல்லப்படுகிறது. தொலைதிருஷ்டியர்களின் பரம்பரை சொத்தான மனோமந்திரம் குறித்த புரிதல்களும், அபாயங்களும் விரிவாக ஆரம்பிக்கின்றன. எல்டர்லிங்கை மூன்றாம் பாகத்திலும் ஹாப் காட்டமாட்டார் போலிருக்கிறது.

சிறு வயதில் ஃபிட்ஸை வளர்த்த வுரிச்சிற்கும் ஃபிட்ஸிற்குமிற்கிடையிலான உறவின் உணர்ச்சிகரமான தருணங்கள், ஃபிட்ஸின் தந்தையின் மனைவியான லேடி பேஸன்ஸ், ஃபிட்ஸ் மீது கொண்டிருக்கும் உணர்வுகளுடன் சென்று நெகிழ்வலைகளாக மோதுகின்றன. முதிய ராஜகொலைஞன் சேட் வழமை போலவே மறைவாக இயங்க ராஜாவின் முட்டாளை சுற்றியுள்ள புதிர்கள் விடுபடுமாற்போல இறுகுகிறது. ராஜமுட்டாளின் விசுவாசம் கதையில் மிக சிறப்பாக தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் வழி செயற்பட ஃபிட்ஸ் விழைந்தாலும் நிகழ்வுகளின் ஆட்டங்களின் விளைவால் அவன் தனித்து எடுக்கும் முடிவுகளின் முடிவுகள் எப்படியாக பக்கீப்பையும் அவன் வாழ்க்கையும் மாற்றி அடிக்கிறது என்பதை சலிப்பே இல்லாமல் ஹாப் எழுதுகிறார்.
மெதுவாக நகரும் நாவல் விரைவாக படிக்க தூண்டும் எழுத்தைக் கொண்டிருக்கிறது. உச்சக் கட்டத்தில் வழமை போலவே ராபின் ஹாப்பின் முத்திரை உண்டு. இரண்டாம் பாகத்தின் முடிவில் நான் உடனே தேடியது மூன்றாம் பாகத்தின் ஆரம்பத்தை.

Assassin's Quest

ஒரு கதை நல்ல கதையாக இருந்தாலும், உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக இருந்தாலும், சர்வதேசரீதியாக விற்பனையில் உச்சங்களை தொட்டு இருந்தாலும் வாசகனின் மனதை நெருங்கி வராத வகையில் அவை வாசகனிற்கு பிடித்தமானவையாக ஆவது இல்லை.

ராபின் ஹாப்பின் எழுத்துக்கள் மிகைபுனைவின் உச்சநிலை என நான் எழுதப் போவது இல்லை. என் வாசிப்பு அனுபவத்தின் படி அப்படியான ஒரு உச்சநிலை என்பது தற்காலிகமானதே. இன்று எமக்கு உச்சநிலையை தரும் ஒரு படைப்பானது காலத்தின் நகர்வில் அதன் உச்சநிலையிலிருந்து கீழிறங்குவது இயல்பான ஒன்றே.

மிகவும் பிரம்மாண்டமான மிகைபுனை கதை வரிசைகளான WOT, ASOIAF போன்றவற்றின் மிகைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட படைப்புக்களாகவே ராபின் ஹாப்பின் படைப்புக்கள் இருக்கிறது. ஜோர்டானின் எழுத்துக்களின் கம்பீரமோ, பலமோ அல்லது மார்டினின் எழுத்துக்களின் உக்கிரமோ வன்மமோ ராபின் ஹாப்பின் எழுத்துக்களில் இருப்பது இல்லை. அதேபோல அவர்கள் உருவாக்கிய உலகுகளின் பிரம்மாண்டங்களும், சிக்கலான கதைநகர் களமும் ஹாப்பின் எழுத்துக்களில் காணக்கிடைப்பது இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் மிகைபுனை ரசிகர்களிற்கு அவரின் கதை சொல்லல் பிடிக்குமா என்பதே சந்தேகம்தான். இருப்பினும் அவர் எழுத்துக்கள் என்னை மிகவும் நெருங்கியிருக்கின்றன.

Farseer முப்பாக நாவல் வரிசையின் மூன்றாவது நாவலான Assassins Quest என் வாசிப்பில் ஒரு அருமையான படைப்பு. பிரதான பாத்திரமான ஃபிட்ஸ் சிவாலெரி மிகைபுனை வரலாற்றில் தன்னை ஒரு சிறப்பான பாத்திரமாக நிரூபிக்கும் படைப்பு. இதற்காக ஃபிட்ஸை ஒரு வீர தீர சாகசனாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பின் எப்படி அவன் சிறப்பான பாத்திரமாகிறான் என்பதை நீங்கள் நாவலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

கதையின் பிரதான எதிர்பாத்திரமான ரீகலின் மரணம் சம்பவிக்கும் விதம் அபாரமான ஒன்று. நீண்ட கதை சொல்லலில் முன்நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் நினைவு மட்டுமே அதன் மர்மத்தை உடனடியாக அவிழ்க்க முடியும்.

ஜோர்டானும், மார்ட்டினும் என்னை ரசிக்க பிரம்மிக்க வைத்திருக்கிறார்கள் ஆனால் ஹாப் தன் மிகைபுனைவால் என் உள்ளத்தை உணர்ச்சிக் குவியலாக்கி விட்டார். அசாத்திய பொறுமையும், சிறப்பான எழுத்துக்கள் மீதான நேசமும் மட்டுமே அவர் எழுத்தை படிப்பதற்கு உங்களுக்கு துணை வரக்கூடும்.