Tuesday, November 11, 2014

வெல்லப்படாதவன்



வதனமோ சந்த்ர பிம்பமோ - 18


நெவெடா மலைப்பகுதியில் டொனா மற்றும் லெனாவுடன் ஓய்வாக சில நாட்களை கழித்துவிட்டு நவஹோ குடியிருப்பிற்கு திரும்புகிறார் கார்சன். அங்கு அவரை வரவேற்கும் டெக்ஸ்,டெக்ஸாஸ் மற்றும் ந்யூ மெக்ஸிக்க எல்லைகளில் சமீப காலமாக நடந்துவரும் குற்ற செயல்களிற்கு பொறுப்பான ஒரு குழுவை நீதியிடம் எடுத்து வரும் பொறுப்பை ரேஞ்சர்களின் தலைமையகம் தன்னிடம் தந்திருப்பதை கூறுகிறார். இதனையடுத்து டெக்ஸ், கார்சன், கிட், டைகர் ஆகியோர் அந்த கேடிக்குழுவை தேடி பயணிக்கின்றனர்...

தமிழ் காமிக்ஸ் நாயகர்களில் கிங்கான டெக்ஸின் மாத வெளியீடு 438ன் கதையின் தலைப்பு Les Invincibles. கதையின் ஆரம்ப பக்கங்களை காண்கையில் அடடா இது டெக்ஸ் கதையா எனும் ஒரு சிறு சந்தேகம் எழுவது நியாயமானதே. ஏனெனில் கதை ஆரம்பிப்பது நமது ரேஞ்சர் சிங்கம் வலம் வரும் பிரதேசங்களிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டெர் நகரில் ஆகும். நீதிமன்றத்திலிருந்து வெல்வ்யூ சிறைக்கு சில கைதிகள் ஒரு வண்டியில் பொலிஸ் பாதுகாவலில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வண்டியை தாக்கி அதில் இருக்கும் தம் தோழர்களை விடுவிக்கிறது ஒரு குழு. சிறைக்கு செல்ல இருந்தவர்களும், அவர்களை காப்பாற்றியவர்களும் சுதந்திர அயர்லாந்தை வேண்டி ஆங்கிலேயர்களிற்கு எதிராக போராடுபவர்கள். வண்டியிலிருந்து தன் தோழர்களை மீட்பதில் முனைப்பாகவும், வன்முறையுடனும் இயங்குகிறான் ஒரு இளைஞன் அவன் பெயர் ஷேன். அவன் நண்பன் டானி மொரான். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஆழ்ந்த நட்புடன் இருப்பவர்கள். தம்மை யாராலும் வெல்லமுடியாதவர்கள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்த தருணத்தில் டெக்ஸின் நீண்டகால வாசகர்களிற்கு கார்சனின் கடந்த காலத்தில் இடம்பிடித்த அப்பாவிகள் குழு நினைவிற்கு வரலாம். ஏனெனில் கதையும், சித்திரங்களும் கார்சனின் கடந்த காலத்தில் பணியாற்றிய கலைஞர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் இந்தக் கலைஞர்களின் கூட்டணியில் ஒரு மூன்றுபாக கதை என்கையில் வாசக மனம் எதிர்பார்ப்பில் சில எல்லைகளை தாண்டி செல்கிறது. அந்த எல்லைகளை வாசகனிற்கு சிறிதேனும் புலப்படுத்தும் விதமாகவே இம்மூன்றுபாக கதையின் [ டெக்ஸ் 438,439,440] முதல் பாகத்தின் கதை ஆரம்பமாகிறது.

தோழர்களை மீட்கும் நிகழ்வானது துரதிர்ஷ்டமான தருணத்தை எட்டுகிறது. டானி குண்டடிபட்டு வீழ்கிறான். தன் நண்பணின் சலனமற்ற உடலை மனதில் வேதனையுடன் தாங்கியவாறே தப்பி செல்கிறான் ஷேன். இதன் பின் கதாசிரியர் Mauro Boselli, கதையை பத்து வருடங்கள் தாண்டி காலத்தில் எடுத்து செல்கிறார். மெக்ஸிக்கோவின் சிகுவாகுவா பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் சோதனையிடப்படும் ஒரு ரயிலில் வாசகர்களிற்கு ஷேனை மீண்டும் அறிமுகம் செய்கிறார் அவர். ரயிலை சோதனை போடும் பொலிஸ் அதிகாரி மெக்ஸிக்க எல்லையில் குற்ற செயல்களை நிகழ்த்தி வரும் அயர்லாந்து குழுவை தேடியே சோதனை நடாத்தப்படுவதாக சொல்கிறார். அயர்லாந்தை சேர்ந்த ஷேனை சற்று சந்தேகத்துடன் பொலிஸார் நோக்கினாலும் அவன் மெக்ஸிக்கோவின் பிரபல ஆயுத வியாபாரியான எடுவார்டோவின் பார்ட்னர் என்பதை அறியும்போது பலத்த பாதுகாப்புடன் ஷேனை அவர்கள் எடுவார்டோவின் மாளிகைக்கு அழைத்து செல்கிறார்கள். எடுவார்டோவும் அவர்களுக்கு நன்றி சொல்வதுடன் பிரதேசத்தின் அமைதியை குலைக்கும் அயர்லாந்து குழுவை விரைவில் பொலிஸார் அழித்தொழிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார்.

ஷேன் எவ்விதம் மெக்ஸிக்க ஆயுதவியாபாரி எடுவார்டோவுடன் பார்ட்னர் ஆனான் என்பது இங்கு கதையில் சொல்லப்படுவது இல்லை. ஆனால் மெக்ஸிக்க எல்லைப் பகுதியில் தன் அக்கிரமங்களை நிகழ்த்தும் அயர்லாந்து குழுவுடன் தன்னையும் இணைப்பதே ஷேனின் நோக்கம். அதையே எடுவார்டோவும் விரும்புகிறான். இவர்கள் இருவரின் மனதிலும் இருப்பது ஒரு ரகசிய திட்டம். அந்த திட்டத்திற்கு காரணம் அயர்லாந்து குழுவினர் அறிந்த ஒரு தகவல். அந்த தகவல் மட்டும் உண்மையெனில் ஷேனும், எடுவார்டோவும் விரைவில் பெரும் செல்வந்தர்கள் ஆவார்கள். ஆனால் ஷேன் தன் பிறந்த மண்ணை விட்டு பிரிந்திருந்தாலும், தன் மண்ணின் சுதந்திர போராட்டத்திற்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். என்றாவது ஒரு நாள் தன் தாய்மண் சுதந்திரமான ஒரு நாடாக வேண்டும் என்பதில் விடாத பற்று கொண்டவன். அயர்லாந்து குழுவில் இணைய அவன் முன்வருவதே அதில் கிடைக்ககூடிய பணத்தை தன் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு தருவதற்காகவே. ஆனால் அவன் தாய் மண்ணில் அவன் வன்முறைகள் சுதந்திர போராட்டத்திற்கு சரியாக இருக்காது என்பதால் அவனை தீர்த்துக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின்னாக அந்த கொலை முயற்சிகளிலிருந்து தப்பியே அவன் தன் தாய் மண்ணை பிரிகிறான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒரு தேசபக்தனாக, நட்பை பெரிதும் மதிப்பவனாக உருவாக்கப்படும் ஷேன் பாத்திரம் கதையின் இறுதிவரை அப்பண்புகளை இழக்காமல் பேணப்பட்டிருப்பது சிறப்பானது.

கதையின் இந்த தருணத்தில் ஷேன் தேடிச்செல்லும் குழுவும், டெக்ஸ் குழுவினர் தேடிச் செல்லும் குழுவும் ஒன்றுதான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் குறித்து ஷேனிற்கு ஏதும் தெரியாது எனினும் டெக்ஸிற்கு இக்குழு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். அது எப்படி என ஒரு கேள்வி எழும்போது வருகிறது ஒரு ப்ளாஷ்பேக். அமெரிக்க சிவில் யுத்தம் முடிவடைந்திருந்த காலப்பகுதியில் நீதித்துறைக்கும் டெக்ஸ்ஸிற்கும் உறவுகள் சுமூகமாக இருந்தது இல்லை. ஆகவே டெக்ஸ் மெக்ஸிக்கோ வந்து சில காலங்கள் தங்கிவிடுகிறார். இங்கு இளமையான ஒரு டெக்ஸை நாம் சந்திக்கலாம். எல் பாஸோ டெல் நோர்ட் எனும் சிறு நகரில் அவர் ஒரு விடுதியில் தங்குகிறார். ஒரு அழகான பெண்ணிற்கு டகிலா வாங்கி தரக்கூட அவர் பையில் பைசா இருக்காது. தன் அறையில் ஓய்வு எடுக்க செல்லும் போது அங்கு அவரின் ஆச்சரியமாக காத்திருக்கிறது அயர்லாந்து குழு.


அயர்லாந்து குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் கான்ஃபெடரேட் வீரர்கள். யுத்தம் முடிவடைந்தபின் கூலிப்படைகளாக உலகின் பல பகுதிகளிலும் சென்று பணியாற்றியவர்கள். அவர்களின் ஒரே ஒற்றுமை அவர்கள் அயர்லாந்தவர்கள் என்பது மட்டும்தான். [சில விதிவிலக்குகள் தவிர்த்து. ] விடுதி அறையில் ஓய்வெடுக்க சென்ற டெக்ஸ் அங்கு அயர்லாந்து குழுவிடம் மாட்டிக் கொள்கிறார். ஹட்ச், ஹலோரான், வாட்ஸ், கெலி எனும் நான்கு பேரை கொண்ட குழுவாக அது அன்றைய நாட்களிலில் இருக்கிறது. இச்சம்பவம் விபரிக்கப்படும் தருணத்தில் சக்கரவர்த்தி மக்மிலியனிற்கும், ஜனாதிபதி குவாரஸிற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் ஒன்று மெக்ஸிக்கோவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குவாராஸிற்கு வாஷிங்டனின் ஆதரவு என்பதால் டெக்ஸும் அவரை ஆதரிக்கிறார். ஆனால் அயர்லாந்து குழு மக்மில்லியன் கீழ் கூலிப்படையாக பணியாற்றுகிறது. அவர்கள் அந்த சிறு நகரில் வந்திருப்பதற்கு காரணமே ஜனாதிபதி குவாரஸை கொல்வதற்காகத்தான். அயர்லாந்து குழுவில் இடம்பெற்றிருக்கும் ஹட்ச் என்பவன் டெக்ஸின் பால்யகால நண்பன். அவன் டெக்ஸாஸில் பிறந்திருந்தாலும் அவன் தந்தை அயர்லாந்தை சேர்ந்தவர் என்பதால் அதையும் தன் நாடு எனவே அவன் ஏற்றுக் கொள்கிறான். அயர்லாந்து குழுவும் அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்திற்காக பண உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று டெக்ஸ் தன் உயிரை தக்க வைத்து கொள்வதற்கு ஹட்ச்சும் ஒரு காரணம். இரண்டாவது காரணம் அழகுப் பதுமை டொலெரெஸ். டொலெரெஸின் மார்பகங்களை ஓவியர் Carlo Raffaele Marcello அதிகம் காண்பிக்கவில்லை எனினும் அவள் கண்ணழகும் மார்பழகும் உள்ளத்தை கொள்ளை கொள்வதாக இருக்கின்றன. டொலெரெஸ் ஹட்ச்சின் காதலியாகவும் கதையின் இப்பகுதியில் சித்தரிக்கப்படுகிறாள். அயர்லாந்து குழுவின் கொலை சதியை முறியடிக்கும் டெக்ஸ், அவர்களை சுதந்திரமாக செல்ல விட்டு அமெரிக்கா திரும்புவதுடன் ப்ளாஷ்பேக் நிறைவுறுகிறது. ஷேன் எப்படி அயர்லாந்து குழுவுடன் இணைகிறான் என்பதுடனும் கல்வெஸ்டன் எனும் எல்லை நகரிற்கு செல்லும் டெக்ஸ் அங்கு பேட் மாக் ரையான் மற்றும்  டானி மொரானை தம் குழுவில் இணைத்துக் கொண்டு மெக்ஸிக்க எல்லையை கடப்பதுடனும். முதல் பாகம் நிறைவு பெறுகிறது.

தேசபற்று, நட்பு என்பவற்றிற்கு முக்கியத்துவம் தரும் விதமாக இப்பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடரும் பாகங்களில் இவை காலத்தின் ஓட்டத்துடன் எவ்விதம் மாற்றம் கொள்கின்றன என்பதை வாசகர்கள் காணலாம். அயர்லாந்து குழுவிடம் இருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதுதான் கதையின் மர்மம் ஆனால் அந்த மர்மம் நண்பர்களுக்கு புதிதான ஒன்றல்ல. ரத்தப்படலம் தொடரிலும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாகம் ஷேனை அயர்லாந்து குழுவில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் சோதனை, மெக்ஸிக்க பொலிசாரை எதிர்கொள்ளும் டெக்ஸ் அண்ட் கோ, ஒரு வழியாக வெளிவரும் அயர்லாந்து குழுவினர் அறிந்திருக்கும் அந்த தகவல், அந்த தகவல் வழியாக உருவாகும் ஒரு திட்டம், டெக்ஸ் அண்ட் கோவும் அயர்லாந்து குழுவும் எதிர்பாராது சந்தித்து கொள்ளும் தருணம், மெக்ஸிக்க பொலிஸ் இவர்களை சுற்றி வளைத்து தாக்குவது என நகர்கிறது. அதிரடி சண்டைகள் இருந்தாலும் வள வள வள வென பாத்திரங்கள் ஓயாது பேசிக் கொள்ளும் பாகம் இது. ஷேன், ஹெர்மொசில்லோ சிறையில் காட்டும் ஆக்ரோஷமாகட்டும், சந்த மார்த்தா கிராமத்தில் டெக்ஸ் காட்டும் அதகள நுட்பங்கள் ஆகட்டும் இந்த வள வள வளவுக்கு முன் அடங்கி போகின்றன. அயர்லாந்து குழுவின் திட்டம் நிறைவேறுமா எனும் ஒரு கேள்வியுடன் இரண்டாம் பாகம் நிறைவுக்கு வரும்.
பிரிந்தவர்கள் கூடினால் என்பது போல டெக்ஸும், அயர்லாந்து குழுவும் குறிப்பாக ஹட்ச்சும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் காட்சி காரமும், உப்பும், பாசமும், நேசமும் கலந்த மாங்காய் துண்டுகளாக ருசிக்கின்றன. ஷேனும் அவனது முன்னைநாள் நண்பனும் மீண்டும் இணையும் காட்சி நட்பின் நாயகராவாக கிராமத்தை நனைக்கிறது. செத்து தொலைங்கடா எல்லாரும் என என் வாசக மனது வெடிக்கிறது. 

மூன்றாம் பாகமானது சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்துடன் டின்னர் சாப்பிட்டு விட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடி செத்து மடிவது என்பதாக இருக்கிறது. கதை ஆரம்பத்தில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கள் பலவும் காய்ந்து போவது இந்த பாகத்தில்தான். நட்பு, காதல், தேசபற்று, வீரம், நீதி, என சும்மா பக்கம் பக்கமாக அடி பின்னுகிறார்கள். போதாது என்று 61 பக்கத்திற்கு நான் ஸ்டாப் ஆக்சன் வேறு. எப்படா இந்த சண்டை முடியும் என்று டெக்ஸ் ரசிகர்களே கதறி அழும் வகையில் இப்பாகத்தில் ஆக்சன் இருக்கிறது. நூற்றுக்கணக்காக மெக்ஸிக்க வீரர்கள் செத்துவிழ சிறு சிறு சிராய்புக்களுடன் டெக்ஸ் அண்ட்  கோ சலிக்காது அதகளம் புரிவது பரட்டை ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். யப்பா ஒரு வழியாக சண்டை முடிந்தது என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டால் விட்டேனா பார் என மீண்டும் ஒரு ஆக்சன். யப்பா சாமி முடியல. தியாகம், தியாகம், தியாகம் என காரஸ்கோவின் மாளிகையில் போஸ்டர் ஓட்டாத குறையாக கதையின் இறுதியில் தியாகங்கள் பல மெக்ஸிக்க தொப்பி நடனம் ஆடுகின்றன. இருப்பினும் கதையின் முடிவில் மனதில் ஒரு நெகிழ்வான உணர்வு வந்து விடுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மிகப்பெரியதொரு எதிர்பார்ப்பை உருவாக்கி அதை தீர்க்காது நிறைவுபெறும் கதைகளில் இதுவும் ஒன்று. பொசெலியிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக அந்த ரகசியம், அந்த திட்டம் எல்லாம் இறுதியில் விழலிற்கு இறைத்த நீராக போனது போன்ற ஒரு உணர்வு உருவாகையில் இப்படியாக இக்கதையை நீட்டி அடித்தது இதற்காகத்தானா எனும் தார்மீக சீற்றம் ஒன்று கண்டிப்பாக உருவாகும். இக்கதையின் சித்திரங்கள் கதைக்கேற்ப மிக சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கார்சனின் கடந்தகால சித்திரங்கள் போலவே உணர்வுகள் சிறப்பாக சித்திரங்களில் உயிர்பெறுகின்றன. தாய்மண்ணை விட்டு பிரிந்து வந்த மனிதர்களின் ஏக்கம், அவர்களின் வாழ்க்கை என்பனவும் சிறப்பாக கூறப்படுகின்றன. கதையின் இன்னொரு சிறப்பம்சம் பாடல்கள். எங்கு ஒரு வாய்பு கிடைக்கிறதோ அங்கு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். மரியாச்சிகள் பாடுகிறார்கள், ஷேன் பாடுகிறாள், அயர்லாந்து குழு பாடுகிறார்கள், டொலெரெஸ் பாடுகிறாள், குத்துசண்டை பார்வையாளர்கள் பாடுகிறார்கள் இப்படியாக இது ஒரு சங்கீத ஆக்சன் என்றால் அது மிகையல்ல.  டிசம்பர் சங்கீத சீசன் என்கையில் இக்கதையும் அம்மாதத்தில் வெளியாவது பொருத்தமானதே.  வெல்ல முடியாதவர்களையும் சில வேளைகளில் நட்பு வீழ்த்திவிடும். ஷேன் அவ்வகையில் வாசகர்கள் மனதில் நிற்பான். வான் வொச்டின் அழகிய முகம் அவனுடன் என்றுமே பயணிக்கட்டும்   வெல்லப்படாதவனாக.